திங்கள், 19 செப்டம்பர், 2011

பயம் போக்கும் பைரவர்

பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது. திருமணத் தடை அகலும். பைரவர் சனியின் ஆசிரியராகக் கருதப்படுகிறார். அதனால், சனியின் இம்சை குறையும், எதிரிகள் அழிவர். பில்லி, சூனியம் அகலும்; வழக்குகளில் வெற்றி காணலாம். கார்த்திகை வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு உகந்த நாள் ஆகும். காசியின் காவல் தெய்வமான கால பைரவர் அவதரித்தது கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி நாளில், சூலமும், உடுக்கையும், மழுவும், பாசக் கயிறும் கைகளில் ஏந்திய கால பைரவரது வாகனம் நாய்.

நெல்லை மாவட்டம், குற்றாலம் செங்கோட்டை பாதையில் உள்ள இலஞ்சி எனும் ஊரில் குமரன் கோயிலில் அருள் புரியும் பைரவரது வாகனமான நாய், இடப் பக்கம் திரும்பி இருப்பது சிறப்பு அம்சம் என்கிறார்கள்.

நெல்லையப்பர் கோயிலில் (திருநெல்வேலி) அருள் புரியும் பைரவர், ஆறு கரங்களுடன் பல வித ஆயுதங்கள் தாங்கி, சாந்த முகத்துடன் திகழ்கிறார். சங்கரன்கோவில் சிவன் கோயிலில், நின்ற கோலத்தில் செங்குத்தாக பாம்பை கையில் ஏந்திய பைரவரை சர்ப்ப பைரவர் என்கிறார்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 8 கைகளுடன் 3 கண்கள் கொண்ட ஐம்பொன்னாலான பைரவரது உற்சவர் சிலையை தரிசிக்கலாம். காரைக்குடியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள திருப்பத்தூர் சிவாலயத்தில், பைரவர் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் காட்சி தருகிறார்.

தஞ்சை பெரிய கோயிலில் அருள் பாலிக்கும் பைரவர் 8 கரங்களுடன் காட்சி தருகிறார். சிருங்கேரியில் மூன்று கால்கள் உள்ள பைரவர் அருள் புரிகிறார். திருவண்ணாமலையில் மேற்கு முகமாக, நின்ற கோலத்தில் 8 கரங்களுடன், 7 அடி உயரத்தில் அருள் பாலிக்கிறார் பைரவர்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில், 8 கரங்களுடன், ஜடாமண்டல கால பைரவர் அருள் புரிகிறார். கும்பகோணம் திருவாரூர் சாலையில் உள்ள சிவபுரம் சிவகுருநாதன் கோயிலில் நின்ற கோலத்தில் கோரைப் பற்கள் மற்றும் பயங்கர உருவத்துடன், கையில் சூலாயுதம் தாங்கி அருள் புரிகிறார் பைரவர். வாகனமான நாய், இடப்புறம் திரும்பி பைரவரின் முகத்தைப் பார்த்த வண்ணம் உள்ளது. கும்பகோணம் அருகில் உள்ள திருவிசலூர் தலத்தில் உள்ள சிவயோகநாதர் கோயிலில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

கருத்துகள் இல்லை: