சனி, 15 பிப்ரவரி, 2014

திருமூலர் வலியுறுத்தும் வழிபாடு

திருமூலர் வலியுறுத்தும் வழிபாடு

பக்தி நெறியைத் தமிழ் உலகிற்கு வழங்கிய சித்தர் பரம்பரையில் முதன்மையும், தொன்மையும், வாய்ந்தவர் திருமூலர்.'சித்தாந்தத்தின் தந்தை' எனப் போற்றத்தக்கவர். முதன்முதலில் 'சித்தாந்தம்' என்ற சொல்லைத் தமது திருமந்திரத்தில் எடுத்தாண்டவரும் இவரே. இவரால் பாடப்பட்ட திருமந்திரப் பாடல்கள் பத்தாம் திருமுறையாகத் திகழ்கின்றன. இப்பத்தாம் திருமுறையில் இறைவழிபாடு பற்றிய செய்திகள் அதிகமாகக் காணக்கிடக்கின்றன.

சைவ சமயம் குறிப்பிடும் சரியை, கிரியை, ஞானம், யோகம் எனும் நால்வகை நெறிகளையும் சுட்டும் திருமூலர், இறைவழிபாட்டில். புறவழிபாட்டு நெறிகளைவிட அகவழிபாட்டு நெறிகளையே மேன்மையுடையதாக வலியுறுத்துகிறார். இன்றைய காலச்சூழலில் அகவழிபாடு எந்த அளவிற்குச் சமுதாயத்திற்குப் பயன்படுகிறது என மதிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வழிபாடு விளக்கம்:

மனத்தை இறைவனிடம் வழிப்படுத்துவது வழிபாடாகும். வழிபாடு என்பது ஒரு சடங்கு. இது உயிர்ப்புள்ள முயற்சி. அறிவார்ந்த ஆள்வினை. மனிதன் எண்ணுதல், நினைத்தல் ஆகிய அகநிலைப் பயிற்சி மூலம் ஆன்மா தன்னை உயர்த்திக் கொள்ளத் துணை செய்வது வழிபாடு. குறைபாடுள்ள உயிர்கள் உயர்ந்த தன்மை அடைய முயல்வதற்கு வழிபாடு இன்றியமையாதது. உயிர்கள் தன்னிச்சையான போக்குகளை நிறுத்தி, நன்னெறியில் மனதைச் செலுத்துதலே வழிபாட்டின் அடிப்படை.

வழிபாட்டின் வகைள்:

வழிபாடு தனிவழிபாடு, கூட்டுவழிபாடு என இரண்டு வகைப்படும். வழிபடுவோர் தன் நன்மை கருதித் தான் மட்டும் வழிபட்டால் அது தனிவழிபாடு, கூட்டுவழிபாடு பலரும் கூடி பொது நன்மைக்கு வழிபடுவது; இசுலாமியர், கிறித்துவரின் கூட்டுவழிபாடு போன்றது. தனியயாரு மனிதன் தன் உள்ளத்தில் தன் ஆன்ம நாயகரான இறைவனை வைத்து வழிபாடு செய்வது அகவழிபாடு ஆகும். இதனை ஆன்மார்த்தம் என்று வழங்குவர். தன் நலம் கருதியோ, பிறர் நலம் கருதியோ, திருக்கோயில் அமைத்து இறைவனை நீராட்டிப் பூச்சொரிந்து வழிபடுவது புறவழிபாடு அல்லது பரார்த்த பூசையாம்.

திருமூலர் காட்டும் வழிபாட்டு நெறிகள்:

திருமூலர் சிவனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு, சிவனை அன்பின் வடிவமாக வழிபட்டவர். திருமூலர் சிவனை வழிபட, ஆகமங்கள் குறிப்பிடும் நால்வகை நெறிகளையும் சுட்டுகிறார். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதாகும். நாடும், நகரமும் தேடித் திரிந்து சிவபெருமானைப் பாடுதலும், ஆலய வழிபாடு நிகழ்த்துதலும் சரியை நெறியின்பாற்படும். மலரிட்டு வணங்கி இறைவனை அகத்தும், புறத்தும் வைத்துப் பூசித்தல் கிரியை நெறியாகும். சாதகர் உடல் நினைவின்றி இறைவனோடு ஒன்றியிருப்பது யோகமாகும். ஞானம் என்பது சிவனை அறியும் அறிவு, சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றும் ஞானத்தை அடைவிக்கும் நெறியாகும். இந்நான்கு நெறிகளில் கிரியை நெறியில் உள்ள அகவழிபாட்டினையே சிறப்பாகவும், உயர்வாகவும் வலியுறுத்துவர்.

கிரியை நெறி:

கிரியை என்பது பூசை. பூசை என்பது பூக்கொண்டு செய்தல் என்று பொருள்படும். இப்பூசை ஆன்மார்த்தம், பரார்த்தம் என இருவகைப்படும். இதில் ஆன்மார்த்த பூசையின் சிறப்பினை உயர்வினைத் திருமூலர் வலியுறுத்துவதன் மூலம், இன்றைய நிலையில் புறவழிபாட்டின் வழி எழும் பலவித சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் அகவழிபாடு அமைகிறது.

திருமூலரும், அகவழிபாடும்:

திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார். சிவபெருமான் ஆன்மாக்கள் தோறும் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம் உள்ளமாகிய மனமண்டலமாகும். அவ்வுள்ளமே சிவன் உறையும் கருவறையாகும். ஊனாகிய உடம்பே கோயிலாகும். அக்கோயிலில் வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். இதனை உணர்ந்து, தெளிந்து ஞானம் அடைவதற்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவோர்க்கு வஞ்சனை செய்யும் ஞானேந்தியங்கள் ஐந்தும் பெரிய ஒளி பொருந்திய விளக்காகும் என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதனை,

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே'

(திருமந்திரம். 1823)

என்ற பாடல் காட்டுகிறது. திருமூலர் உடலினை நடமாடும் கோயிலாக உருவகிக்கிறார் (திரு.ம.1857). சைவ சமயத்தில் பூசலார் நாயனாரும் மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்தார். ஆழ்வார்களில் பொய்கையாழ்வார் தமது முதல் திருவந்தாதியில்,

'வையந் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினன் சொன்மாலை

இடராழி நீங்குவவே என்று'

என்றும், பூதத்தாழ்வார் தமது இரண்டாம் திருவந்தாதியில்,

'அன்பே தகளியா யார்வமே நெய்யாக

அன்புருகுஞ் சிந்தை யிடுதிரியாய் நன்புருக்கி

ஞானச் சுடர்விளக் கேற்றினன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்'

என்றும் குறிப்பிடுவது ஈண்டு நோக்கத்தக்கது. பிற்காலத்தில் தோன்றிய சிவவாக்கியார் எனும் சித்தர்,

'கோயிலும் குளங்களும் கும்பிடும் குலமாரே

கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே'

(திருமந்திரம். 1823)

என்று தம் பாடலால் அகவழிபாட்டினை வலியுறுத்துகிறார். திருமூலர் தமது திருமந்திரத்தில் சுமார் 59 பாடல்களில் உடலை அல்லது உள்ளத்தைக் கோயிலாகக் குறித்து பாடியதாகத் தெரிகிறது.

திருமூலர், மனத்தையே கோயிலாகக் கொண்டு விளங்கும் இறைவனுக்குக் காலையிலும், மாலையிலும் பாடும் பாட்டே நிவேதனப் பொருட்களாகும் என்று குறிப்பிடுகிறார் (திரு.ம.1824). மனத்துள்ளே விளங்கும் இறைவனை வழிபட மலரையும் நீரையும் அடுத்துக் கூறுகிறார். புறத்தேயுள்ள பெருமானை வழிபட நீரும், மலரும் இன்றியமையாதன. அதுபோல அகத்தேயுள்ள பெருமானை வழிபடக் கண்களையே மலராகவும், அதில் கசிந்துவரும் கண்ணீரையே நீராகவும் கொண்டு அபிடேகம் செய்து வழிபடுதலே சிறந்த வழிபாடு (திரு.ம.1826) எனக் குறிப்பிடுகிறார். இதனை,

'நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்

கலைகழல் ஈசசைக் காண அரிதாம்

கனைகழல் ஈசனைக்காண்குற வல்லால்

பனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே'

(திருமந்திரம். 1826)

என்ற பாடல் காட்டுகிறது. இவ்வாறு மலரையும், நீரையும் உணர்ந்து சிவனுக்கு வழங்குபவர்களே புண்ணியம் செய்தவர்கள். இவ்வுண்மையை அறியாது உலகத்தார் கெடுகின்றனரே (திரு.ம.1828) என்று வருந்துகிறார்.

திருமூலர், திருக்கோயிலில் பூசைகள் செய்தல் நூறுமடங்கு உயர்ந்தது. ஆனால் தவம் செய்வாரின் உடலில் (உள்ளத்தில்) செய்யப்படும் சிவபூசை ஆயிரம் மடங்கு உயர்ந்ததாகும் (திரு.ம.1851) எனப் புறவழிபாட்டை விட அகவழிபாடு சிறந்தது என்று அகவழிபாட்டின் மேன்மையை விளக்குகிறார்.

இன்றைய சூழலில் அகவழிபாட்டின் தேவை:

இன்று தமிழ்நாட்டில் கோயில்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் அக்கோயில் களினால் பல்வேறு சமயப் பூசல்களும், சமுதாய மோதல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று கோயில் நிலங்கள் பல நிலக்கிழார்களின் கைகளில் உள்ளன. மேலும் கோயில்களினால் வரும் வருமானம் முறையாக அரசிற்குக் கிட்டுவதில்லை. அவை நிருவாகத்தாரினரால் கையகப் படுத்தப்படுகிறது. கோயில் களுக்குச் செல்லும் பக்தர்களினால் கோயில் சுகாதாரச் சீர்கேட்டினை அடைகின்றது. திருக்கோயில்களில் விழாக் காலங்களில், திருவிழா என்ற பெயரில் மின்சாரம், தண்ணீர், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சமுதாயத்தைப் பாதிக்கும் வகையில் திருக்கோயில் வழிபாடு அமைகிறது. திருக்கோயில்களுக்கு'வேண்டுதல்' என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் வழிபாடு செய்தல், பாதயாத்திரை, பஜனை (பக்திப்பாடல்கள்) செய்தல், ஊர்வலம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு அமைதியின்மை, போக்குவரத்து நெரிசல், விபத்து போன்ற துன்பங்கள் நிகழ்கின்றன. இன்றைய சூழலில் மக்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்த ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நோன்பு நோற்றல், பாதயாத்திரை, ஊர்வலம் செல்லுதல் போன்ற செயல்களால் சமயப் பூசல்களும், சமுதாயச் சிக்கல்களும் ஏற்படப் புறவழிபாடு வழிவகுக்கிறது. வழிபாட்டு நெறிமுறைகளில் படையல்முறை (நிவேதனம்) குறிப்பிடத் தகுந்ததாகும். இன்று சிறுதெய்வ வழிபாட்டில் ஆடு, கோழி போன்ற உயிரினங்களை, பலியிடல் என்ற சூழ்நிலை ஏற்பட புறவழிபாடுகள் வழி வகுக்கின்றன.

தமிழர் வழிபாட்டில் உயிர்ப்பலிகளைக் கொடுத்து வேள்வி செய்வதைத் தமிழ்ச் சமயங்கள் வன்மையாகக் கண்டித்தன. வேள்வி புரிதலை வெறுத்து ஒதுக்கி வந்த தமிழர் நாகரீகத்தில் வேள்வி செய்யும் வழக்கமும், சடங்குகளும் மெல்ல வந்து புகுந்து கொண்டன. வேள்வி செய்தல் தமிழர்நெறி அன்று. திருமூலர் உயிர்ப்பலியைச் சாடுகிறார். வள்ளுவரும் வேள்வி செய்தலை,

'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்சொகுந்து உண்ணாமை நன்று

(திருக்குறள். 259)

என வன்மையாகச் சாடுகிறார்.

இன்றைய சூழலில் வழிபாடு என்ற பெயரில், சமயப் பூசல்கள், மோதல்கள் ஏற்பட புறவழிபாடாகிய திருக்கோயில் வழிபாடு காரணமாக அமைகிறது. இந்நிலையில் திருமூலர் வலியுறுத்தும் அகவழிபாட்டினை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றினால் சாதி, சமயமற்ற தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.